“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

ஊட்டி மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால்தான் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

RN Ravi

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார்.

இந்த மாநாட்டுக்கு மொத்தம் 49 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”இந்த மாநாட்டில் அரசு பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவில்லை. இதில் கலந்து கொள்ளக் கூடாது என அரசு எச்சரித்ததாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

சில துணைவேந்தர்கள் ஊட்டிவரை வந்துள்ளார்கள், துரதிர்ஷ்டவசமாக மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், மாநில அரசு அவர்களைக் கலந்துகொள்ள கூடாது என எச்சரித்துள்ளது. இப்போது கூட ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்தில் உள்ளார்.

ஊட்டிக்கு வந்த சிலரையும் நள்ளிரவில் அவர்களின் அறைகளுக்குச் சென்று, நீங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டால், வீடுகளுக்குச் சென்று உங்கள் குடும்பங்களைப் பார்க்க முடியாது’ என்று தமிழகத்தின் சிறப்புக் காவல்துறை அதிகாரிகள் சென்று மிரட்டியுள்ளனர். இது முன்னெப்போதும் நடக்காத ஒன்று.

கல்வியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த மாநாடு மிக உதவியாக இருக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுத படிக்க தெரியவில்லை. மாநில பல்கலைகழக பட்டதாரிகளுக்கு தரமான கல்வி வழங்கப்படவில்லை” என கூறியுள்ளனர்.

இதையடுத்து பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ”அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க தீர்க்கத்துடன் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருகிறார். ஆளுநராகப் பதவி ஏற்கும்போது ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்தை தீவிரமாகக் கடைபிடிக்கிறார் என்று புகழந்தார்.

இதனிடையே, இந்த மாநாட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊட்டியில் காஃபி ஹவுஸ் சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினர் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்