ஃபெஞ்சல் புயல் எதிரொலி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக ஒத்திவைக்கப்பட்ட பல்கலைகழக தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஃபெஞ்சல் புயல் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கவுள்ளது. இதனால், வட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றும், அதிகனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, ‘ஃபெஞ்சல்’ புயல் எதிரொலியாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர், மந்தவெளி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, கள்ளிகுப்பம், அத்திப்பட்டு, அயப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழத்திற்கு கீழ், செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் நாளை (நவ.30) நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிதம்பரம் அண்ணாமலை, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை பல்கலைக்கழத்தில் இன்று (நவ.30) நடைபெறுவதாக இருந்த தேர்வு டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று (30-11-2024) நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன, மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அம்பேத்கர் பல்கலைகழக பதிவாளர் அறிவித்துள்ளார்.