தமிழக பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு பணிகள்… உள்துறை புதிய உத்தரவு.!
சென்னை : தமிழகத்தை சேர்ந்த 2 பெண் டிஐஜிகளுக்கு மத்திய அரசு பணிகள் ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ், ஐஏஎஸ் எனும் இந்திய காவல் பணிகள், இந்திய குடிமை பணிகள் ஆகிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு என இரு வித பணிகளிலும் அரசின் தேவை மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார்கள்.
அதன்படி, தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பணிகளுக்கு செல்ல ஆர்வமுள்ள நபர்களின் பட்டியலில் உள்ளவர்களில் மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மற்றும் காஞ்சீபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்னி ஆகியோரை மத்திய அரசு பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பணியமர்த்தி உள்ளது.
மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. டிஐஜி ரம்யா பாரதி மத்திய விமான பாதுகாப்பு பிரிவிற்கும் , டிஐஜி பொன்னி மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல மாநில அரசின் ஆட்சி பணிகளுக்கும், மத்திய அரசு அதிகாரிகள் தேவை இருப்பின் அதற்கான இடமாற்ற உத்தரவுகளும் அவ்வப்போது மத்திய அரசின் ஒப்புதலோடு நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.