தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன்… வெள்ள பாதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை.!
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பல பகுதிகள் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்வழி பகுதிகளில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, பெரும்பாலான குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
கடந்த பத்து நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் இந்த வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியலமைப்பினர் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட எம்.பி கனிமொழி..!
தென்மாவட்ட வெள்ளை பாதிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, நிவாரண உதவிகளை அறிவித்தார். அதேபோல் மத்திய குழுவும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடிக்கு வந்து வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து அவர் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்பி கனிமொழி, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் வெள்ள பாதிப்பு குறித்து கலந்து ஆலோசித்து வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.