டங்ஸ்டன் சுரங்கம் வராது.? “நாளை நல்ல முடிவு அறிவிக்கப்படும்” – மத்திய அமைச்சர் உறுதி!
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் நாளை மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரப்பூர்வமாக வரவிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ‘மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சமீபத்தில், டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் 40 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அமைதி பேரணியாகச் சென்றனர்.
இதை தொடர்ந்து, டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அண்ணாமலை தலைமையில் நடந்த இச்சந்திப்பில் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டுமென மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தற்பொழுது, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரிதாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக அமைச்சர் கிசான் ரெட்டியை போராட்டக் குழுவினர்களுடன் சந்தித்தோம். டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக கிராம மக்களுடன் இணைந்து மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். டங்ஸ்டன் திட்டம் முழுமையாக வேண்டாம் என அரிட்டாபட்டி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
தொடர்ந்து, தன்னை நம்பிய மக்களை பிரதமர் கைவிடவில்லை. அரிட்டாபட்டி கிராம மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றும். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மகிழ்ச்சியான செய்தி, நாளை இத்திட்டம் கைவிடப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.