தமிழ்நாட்டிற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய நிதி அமைச்சகம்!
16 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.56,415 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்.
மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் 2023-24 கீழ் 16 மாநிலங்களுக்கு 56,415 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், குடிநீர் வழங்கல், மின்சாரம், சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக, பீகாருக்கு, 9,640 கோடி ரூபாயும், மத்திய பிரதேசத்திற்கு, 7,850 கோடி ரூபாயும், மேற்கு வங்காளத்திற்கு, 7,523 கோடி ரூபாயும், ராஜஸ்தானுக்கு, 6,026 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு 4,528 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.4,079 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,647 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக கோவாவுக்கு ரூ.386 கோடி, அதைத் தொடர்ந்து சிக்கிமுக்கு ரூ.388 கோடியும், மிசோரமுக்கு ரூ.399 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, 24 நிதியாண்டில், 50 ஆண்டு கால வட்டியில்லா கேபெக்ஸ் கடன்களாக, மாநில அரசுகளுக்கு மொத்தமாக ரூ.1.3 லட்சம் கோடியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ. 81,195 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது.