கோவை, மதுரை மெட்ரோ.., புதிய ரயில்வே திட்டங்கள்..! முதலமைச்சரின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்…
சென்னை: 2024-2025ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாளை மறுநாள் (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வந்த பாஜக, இந்த முறை கூட்டணி பலத்துடன் ஆட்சியமைத்துள்ளது.
அதனால், கூட்டணி கட்சிகளின் தேவைகளையும், கோரிக்கைகளையும் கணக்கில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மத்திய பட்ஜெட் குறித்து தங்கள் எதிர்பார்ப்புக்களை மாநில பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைத்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான கோரிக்கைகள் என பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள்….
- மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்.
- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- பத்தாண்டுகளாக வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.
- கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான வரவு செலவு வரம்பை உயர்த்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளார்.