மோடியின் ஆட்சியில் ஏழைகளின் வருமானம் குறைவு – கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு
முதலில் படேலை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடி, தற்போது நேதாஜியை தேர்ந்தெடுத்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகளின் வருமானம் குறைந்து, பணக்காரர்களின் வருமானம் 33% அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏழைகளின் வருமானம் குறைந்ததால் ஏற்பட்ட விளைவுகளை கிராமப்புறங்களில் காண முடிகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஏழை, பணக்காரர்கள் வேறுபாடு அதிகம் உள்ளது.
இந்த வேறுபாடு என்பது அரசிடம் சரியான பொருளாதார கொள்கை இல்லாததையே காட்டுகிறது. விசைத்தறி இந்தியா முழுவதும், கோவையில் மட்டுமல்ல மகாராஷ்டிராவில் விசைத்தறிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இல்லா சூழல் உருவாகியுள்ளது. இதற்கு காரணம் சரியான பொருளாதார தொழில்கொள்கை இல்லாததது என்பதாகும். மோடி அரசின் தவறான கொள்கையால் தான் நூல், பஞ்சு விலை அதிகரித்துள்ளது. நூல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் நாடுமுழுவதும் விசைத்தறியாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளன.
மும்பை பொருளாதார ஆய்வு மையத்தின் புள்ளி விவரத்தின்படி, தகவல் வந்துள்ளது என்றும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி வழக்கம்போல் நேதாஜிக்கு புகழ்பாட ஆரம்பித்துள்ளார். முதலில் படேல் அவர்களை தேர்ந்தெடுத்தார். இப்போது நேதாஜி அவர்களை தேர்தெடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி பொறுத்தளவில், மகாத்மா காந்தியாக இருந்தாலும், நேதாஜி, படேல் மற்றும் நேருவாக இருந்தாலும் அனைவரும் தோழமை உணர்வோடு பெருத்தனமையாக பழகியவர்கள்.
இவர்களில் யாருக்குமே மோடிக்கும், அத்வானிக்கு இருப்பதை போன்ற உறவு இருந்தது அல்ல. மோடி, அத்வானி உறவு உலகமறிந்த உண்மை. அத்வானி அவர்கள் பேசுகிற போது, மோடி அவர்கள் ஒலிபெருக்கியை அவரது வாயிற்கு முன்பாக பிடித்து கொண்டியிருந்தவர். அந்த அளவிற்கு அவருக்கு அடக்கமான துணையாக இருந்தவர் என்றும் விமர்சித்தார். குஜராத் என்றாலே மகாத்மா காந்திதான் முதன்மையானவர். அங்கு படேலின் பிரமாண்ட சிலை வைப்பது காந்தியை குறைத்து காட்டவே எனவும் குற்றசாட்டினார். மேலும், காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பில் குடிநீருக்கு 11 டிஎம்சி ஒதுக்கப்ட்டுள்ளது.
காவிரி குடிநீர் பிரச்சனையில் தமிழ்நாடு பக்கம் காங்கிரஸ் நிற்கும் என்றும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்த கே.எஸ் அழகிரி, இந்திய ஆட்சி பணி அதிகாரிகளுக்கான விதிகளை மாற்றுவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிடம் நிறைய இடங்கள் கேட்க உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.