100 நாள் பிரச்சாரத்தை இன்று தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இதனால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியயை அமைக்க போவது யார்..? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து 100 நாள் பிரச்சாரத்தை இன்று திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கவுள்ளார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முதல்கட்டமாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2019-ல் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கைக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.