மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று எரிசக்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நான் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீட்டின் கீழ் 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தேன்.
அதைப்போல பொதுத்துறையிலும், அரசு துறையிலும் 104 வீரர்களுக்கு சென்ற ஆண்டு முதலமைச்சர் அவர்களே தன்னுடைய கையால் வழங்கியிருக்கிறார். அதைப்போலவே இந்த ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் என் கீழ் வேலைவாய்ப்பு என்பது நிச்சயமாக அரசுத்துறை மற்றும் பொதுத்துறையில் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அடுத்ததாக சட்ட உறுப்பினர் சிந்தனை செல்வன் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கத்தை மட்டும் கொடுக்காமல் வேலை வாய்ப்பு வழங்கி அவர்களை உற்சாக படுத்தும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. அதைப்போலவே, அணைத்து துறைகளிலும் இதனை விரிவுபடுத்தவேண்டும்…இந்த ஆண்டு நடைபெறுமா எனவும்…விளையாட்டு வீரர்களுக்கு காவல்துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுமா? எனவும் கேட்கிறேன் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் ” 3% இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் காவல்துறையில் பணியாற்றும் வாய்ப்பு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட 104 பேரில் 11 காவல்துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விரைவில் கான்ஸ்டபிள் பணிக்கும் விண்ணப்பங்கள் கோரப்படும். எனவே, காவல்துறையில் விளையாட்டு வீரர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதை உறுதியாக சொல்கிறேன்” எனவும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.