“கூட்டணிக்கு வர 100 கோடி கேக்குறான்” அதிமுக கூட்டத்தை கலாய்த்த உதயநிதி!
அதிமுக கூட்டணிக்கு வர 100 கோடி கேட்கிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை குறிப்பிட்டு , 'எந்த கட்சிக்கும் இந்த நிலைமை வந்ததில்லை' என்று உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. ஆனால், எதிர்கட்சியாக உள்ள அதிமுக தொடர் தோல்விகளையே பெற்று வருகிறது. மேலும், திமுக போன்று ஓர் வலுவான கூட்டணி அமைக்க அக்கட்சி போராடி வருகிறது.
இதனை அக்கட்சி பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனே கட்சி நிர்வாகிகள் முன் மேடையில் வெளிப்படையாக கூறிவிட்டார். கடந்த நவம்பர் 19 அன்று திருச்சியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், ” கூட்டணிக்கு வருவதற்கு 50 கோடி , 100 கோடி, 20 சீட் என கேட்கிறார்கள். எதோ நெல் மூட்டை வியாபாரம் போல பேரம் பேசுகிறார்கள். அவர்களிடம் எடப்பாடியார் தான் தொடர்ந்து பேசி வருகிறார். விரைவில் நல்ல செய்தி வரும் ” என பேசியிருந்தார்.
இதனை குறிப்பிட்டு பேசிய திமுக இளைஞரணி தலைவரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், எந்த கட்சிக்கும் இப்படி ஒரு நிலைமை வந்ததில்லை என விமர்சித்தார். மேலும், “திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். அதேபோல அதிமுக கட்சியிலும் கள ஆய்வு நடத்துகிறார்கள். ஆனால் அங்கு நடப்பது வேறு.
அண்மையில் அக்கட்சி பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், கூட்டணிக்கு வர 20 கோடி கொடு, 100 கோடி கொடு என கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் இப்படி ஒரு நிலைமை வந்ததில்லை. திமுக கூட்டணி 2019 முதல் வெற்றி பெற்று வரும் வெற்றி கூட்டணி . இது ஒரு கொள்கை கூட்டணி. இந்த கூட்டணி 2026லும் தொடரும்.” என பேசினார்.
மேலும், “திமுக கட்சி நிர்வாகிகள் நமது (திமுக) திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 2026 தேர்தலில் 234 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும்.” என நாகையில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.