கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுனரின் மகள்! ரூ.1 கோடி பரிசு வழங்கிய உதயநிதி!
உலக கேரம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு போட்டிகள் ஆண் – பெண் இரு பாலருக்கும் நடைபெற்றது.
இதில், 18வயதுக்கு மேற்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் உலக கேரம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் சென்னை காசிமேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெஹபூப் பாஷாவின் 18 வயது இளம் வீராங்கனை எம்.காசிமா. மேலும், காசிமா மற்றும் மதுரையைச் சேர்ந்த மித்ரா இணைந்து கேரம் இரட்டையர் சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நாகஜோதி விளையாடிய அணி குழுவாக சாம்பியன்ஷிப்பை பட்டத்தை வென்றது.
18 நாடுகள் கலந்த கொண்ட இந்த போட்டியில் அனைத்து விதமான போட்டிகளிலும் இந்தியா சார்பாக கேரம் வீரர்கள் பங்கேற்றனர். இந்திய அணி சார்பாக களமிறங்கிய இவர்கள் அனைவரையும் கேரம் விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மரிய இருதயம் வழிநடத்தி சென்றார்.
செஸ் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகளைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்தார். பெண்கள் பிரிவில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார். மேலும், இரட்டையர் பிரிவு, குழு பிரிவில் சாதனை படைத்த கேரம் வீராங்கனைகள் மித்ரா மற்றும் நாகஜோதிக்கு தலா ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.