நான் கருணாநிதியிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் -மு.க.ஸ்டாலின்
- திமுக சார்பாக பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
- நான் கருணாநிதியிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 30 லட்சம் இளைஞர்களை புதிதாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் புதியதாக 30 லட்சம் இளைஞர்களை கட்சியில் இணைவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும் தமிழகத்தில் பல இடங்களில் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று இணைப்பு முகாம்களை துவங்கி வைத்து நிர்வாகிகளுக்கு ஊக்கமும் ,உற்சாகத்தையும் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினருமான ம.சுப்ரமணியனுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை விட ஒரு லட்சத்து 20 ஆயிரம் இளைஞர்கள் திமுக இளைஞரணியில் சேர்த்து உள்ளார்.
இதற்காக சென்னையில் உள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,அவரது மகனும் ,திமுகவின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசுகையில், மறைந்த தனது தந்தை கருணாநிதி தனக்கு வைத்த அனைத்து போட்டிகளிலும் தான வெற்றி பெற்றதாகவும், அதைப் போலவே உதயநிதி ஸ்டாலினும் வெற்றிப்பெறுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறினார்.
மேலும் நான் கருணாநிதியிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன். நன்றாக உழைப்பார் என உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இளைஞரணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என நம்புகிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.