துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,
துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலைஞர் - அண்ணா நினைவிடம், கலைஞர் இல்லம், அமைச்சர் துரைமுருகன் இல்லம் ஆகிய இடங்களுக்கு.சென்றார்
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த ‘துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘ எனும் அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சரவையில் இருந்து முன்பு நீக்கம் செய்யப்பட்டிருந்த நாசர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், புதிதாக கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் இன்று ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்வைத்தார்.
துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இன்று தனது முதல் நாளில், அரசியல் தலைவர்களுக்கு தனது மரியாதையை செலுத்தினார். முதலாவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது நன்றியை சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்தார்.
அதன்பிறகு இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர், பெரியார் திடலுக்கு சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அடுத்ததாக, திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களது இல்லத்திற்கு சென்று அவருடைய உருவப்படதற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், கோபாலபுரம் சென்ற உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் சென்னை சிஐடி காலனியில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இறுதியாக, திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.