முதல் நாள் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது..!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து 100 நாள் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்தார்.
திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தங்களது பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வரும் 29-ம் தேதி சேலத்திலிருந்து திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியும், ஜனவரி 5-ம் தேதி காஞ்சிபுரத்திலிருந்து ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்கள். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார்.
உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று உதயநிதி, கருணாநிதி இல்லத்தில் உள்ள கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஊரடங்குவிதிகளை மீறியதாக கூறி போலீசார் கைது செய்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.