ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!
வரும் அக்டோபர்-22ம் தேதி வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக, இன்றும் (18/10/2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 22-ம் தேதி வங்கக்கடலில் புதிதாய் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை புயலாக மாறினால் வடக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது. அதேபோல, மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக்கடலில் உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்திய பகுதியை விட்டு நகர்ந்து செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஒரு வேளை இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானாலும் அது தமிழகத்தை பாதிக்காது என தெரிகிறது.