ப்ரைட் ரைஸ் சாப்பிட்டு விட்டு தூங்கிய இரு குழந்தைகள் உயிரிழப்பு – எச்சரிக்கும் மருத்துவர்கள்!
இரவு நேரத்தில் தாமதமாக தந்தை தனது கடையிலிருந்து கொண்டு வந்த ப்ரைடு ரைஸை சாப்பிட்டு விட்டு தூங்கிய இரு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது.
நேபாளை சேர்ந்த சந்தோஷ் ஆர்த்தி ஆகிய தம்பதிகள் திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தலில் தங்களது 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். சந்தோஷ் திருப்பூரில் தனியார் பாஸ்ட் புட் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து வரும் பொழுது ஹோட்டலில் உள்ள உணவுகளை தனது குழந்தைகளுக்கு இரவு உணவாக கொடுப்பது வழக்கமாம்.
ஆனால், சந்தோஷ் வேலை முடிந்து வருவதற்கு 11 மணி ஆகிவிடுமாம், அந்த நேரத்தில் தான் குழந்தைகள் அவர் கொண்டு வரும் பிரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டுவிட்டு தூங்குவார்களாம். இவ்வாறு நேற்று முன்தினம் இரவும் 11 மணியளவில் தான் கொண்டு வந்த உணவை தனது மூத்த மகன் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் கொடுத்துள்ளார். உணவை சாப்பிட்டு விட்டு தூங்கிய மகன் அசைவின்றி கிடப்பதை பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டது என கூறவே குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த கணமே அந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு தூங்கிய மகளும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்பொழுது குழந்தைகள் இரவு தாமதமாக சாப்பிட்ட உணவு செரிக்காமல் இருந்தது தெரிய வந்ததை அடுத்து, தடவியல் நிபுணர்களுக்கு குழந்தைகளின் குடல் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். குழந்தைகள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள் துரித உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது எனவும், குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் இது போன்ற உணவுகளை கொடுக்காதீர்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.