தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்? தவெகவில் வெளியான முக்கிய தகவல்!
தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் செல்கிறார் என அக்கட்சி இணை கொள்கை பரப்பு செயலாளர் தஹீரா பேட்டியளித்துள்ளார்.
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அதனை அடுத்து, அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் பேசினார். மேற்கண்ட 2 மேடை பேச்சுக்களை தவிர்த்து ஒரு சில நிகழ்வில் மட்டுமே மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் விஜய்.
இந்நிலையில் மக்களை நேரடியாக எப்போது சந்திப்பார் என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்தது. விஜய் சுற்றுப்பயணம் எதுவும் செல்வாரா? விக்கிரவாண்டி மாநாடு போல, வேறு மாவட்டங்களில் மாநாடு நடத்துவாரா என்றும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று வேலூரில் நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கை விழாவில் தவெக கட்சியின் இணை கொள்கை பரப்பு செயலாளர் தஹீரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “விரைவில் எங்கள் தலைவர் (விஜய்) தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதுகுறித்த அறிவிப்பை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும். எங்கள் பொதுச்செயலாளர் வழிகாட்டுதலின்படி விரைவில் அறிவிப்பு வரும்” என தெரிவித்தார் .
மேலும் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியில் இருந்து 250 பேர் எங்கள் கட்சியில் தற்போது இணைந்துள்ளனர். 2026இல் எங்கள் தலைவரை (விஜய்) முதலமைச்சராக அமர வைக்க வேண்டும் என நாங்கள் பயணித்து வருகிறோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.” எனவும் தஹீரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.