விஜய் தலைமையில் த.வெ.க மாநாடு.! விசிகவின் நிலைப்பாடு என்ன.?

விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற தவெக மாநாடு குறித்து விசிக மூத்த நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

TVK Leader Vijay - VCK Leader Thirumavalavan

சென்னை : விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளை உள்ளிட்ட தலைவர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது.  அவர்கள் தான் கட்சியின் வழிகாட்டி என்றும் தவெக தலைவர் விஜய் கூறினார்.

அதனுடே, பெரியாரின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும் , அவரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், யாருடைய மத நம்பிக்கையையும் நாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் கூறினார். மேலும், பகவத் கீதை, குர் ஆன் , பைபிள் ஆகியவை தவெக மாநாடு மேடையில் விஜய்க்கு பரிசளிக்கப்பட்டன. பாடலிலும் அவை குறிப்பிடப்பட்டது. விஜய் பேசுகையில்,  ‘விசிகவ ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ கொள்கை பற்றியும் பேசியிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆதவ் அர்ஜுனா :

விஜயின் முதல் அரசியல் மாநாடு குறித்து பல்வேறு அரசியல் கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில்,  விசிகவில் இருந்து ஆதரவு கருத்தும், விமர்சன கருத்தும் எழுந்துள்ளது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ” ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது.

அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய். அவருக்கு வாழ்த்துகள். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும். ” என விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

ரவிக்குமார் :

அதேநேரம், விசிக எம்பி ரவிக்குமார் பதிவிடுகையில், ” பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்க வேண்டும். தனது கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக புரட்சியாளர் அம்பேத்கரை விஜய் குறிப்பிட்டிருக்கிறார். மதச்சார்பின்மைதான் தனது கொள்கை என்று அறிவித்திருக்கும் விஜய், இன்று (அக்டோபர் 27) மாநாட்டு மேடையில் இந்து மதத்தின் குறியீடாக பகவத் கீதையையும், இஸ்லாம் மதத்தின் குறியீடாகக் குர்ஆனையும், கிறிஸ்தவ மதத்தின் குறியீடாக பைபிளையும் நினைவுப் பரிசாகப் பெற்றார்.

பகவத் கீதையைப் பற்றி அம்பேத்கர், ‘புரட்சியும் எதிர்ப் புரட்சியும்’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். “ பௌத்தம் இந்த சமூகத்தில் தார்மீக மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. மௌரியப் பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியபோது, ​​சமூகப் புரட்சி அரசியல் புரட்சியாக மாறியது. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பௌத்த மன்னர்களால் பாதிக்கப்பட்ட பிராமணர்கள், புஷ்யமித்ர சுங்கனின் தலைமையில் ஒரு எதிர்ப்புரட்சியைத் தொடங்கினார்கள். அந்த எதிர்ப்புரட்சிதான் பிராமணியத்தை மீட்டெடுத்தது. பகவத் கீதை, இந்த எதிர்ப் புரட்சிக்குக் கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக இயற்றப்பட்டது” என்று தனது நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய், பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும். ” என தனது அறிவுறுத்தலை விசிக எம்பி ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனை செல்வன் :

விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் பதிவிடுகையில், ” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் உயரிய குறள் நெறியை தனது கட்சியின் உயிர் கொள்கையாய் உயர்த்திப்பிடித்த த.வெ.க தலைவர் விஜய், அதை நடைமுறை படுத்திட ‘சாதி ஒழிப்பு அரசியலை’ அல்லவா முன்மொழிந்திருக்க வேண்டும்.

மாறாக வெறும் தீண்டாமை ஒழிப்பு குறித்து மட்டும் மேலோட்டமாக பேசுவது அப்பட்டமான சமரச அரசியல் அல்லவா? பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கற்பிக்கும் சாதிய மலத்தை அகற்றாமல் நாற்றமென வெளிப்படும் தீண்டாமையை மட்டும் ஒழிப்பதாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகாதா? அம்பேத்கரை கண்டு சனாதன கும்பல் அச்சப்படுவதற்கு காரணம் அவர் சாதி ஒழிப்பை முன்வைத்ததால்தான்!.” என தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்த 3 கருத்துக்களும், விஜயை நேரடியாக அதாரிக்காவிட்டாலும், அவருக்கு மறைமுக ஆதரவையும், சில அரசியல் அறிவுறுத்தல்களையும் மட்டுமே விசிக வழங்கியுள்ளது. திமுகவின் திராவிட கொள்கையை கடுமையாக விமர்சித்த விஜய் பற்றி , திமுக கூட்டணியில் இருக்கும் விசிக எதிர்க்கருத்து கூறாமல், ஆதரவு மற்றும் அறிவுறுத்தல் நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்