தவெக மாநாடு : விஜய்க்கு அளிக்கப்பட்ட வீரவாள்! பின்னணியில் இருக்கும் சிறப்புகள் இதுதான்!
தவெக மாநாட்டில் விஜய்க்கு அளிக்கப்பட்ட வீரவாள் சோழர் காலத்து முறைப்படி செய்யப்பட்டது எனும் ஒரு புதிய தகவல் தெரியவந்துள்ளது.
சென்னை : கடந்த அக்-27ம் தேதி தவெக முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு யானை சின்னம் பொறிக்கப்பட்ட வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.
அந்த வாள், சோழர் காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய வாளை போன்று, அதாவது அந்த வாள் சோழர்களின் வாளின் வடிவமைப்பை போல உருவாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. விஜய்க்கு அளிக்கப்பட்ட இந்த பரிசு வாள், தஞ்சை மாவட்டம் சுவாமி மலையில் உள்ள தேசிய விருது பெற்ற தேவசேனாதிபதி சிற்பக் கலைக்கூடத்தில் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள சிற்ப கலைஞர்களான ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் சதாசிவம் ஆகியோரால் இந்த வாளை செய்திருக்கின்றனர். இந்த வாளைக் குறித்து பேசிய அவர்கள், “நாஙகள் தலைமுறை தலைமுறையாக இந்த சிற்பத் தொழில் செய்து வருகிறோம்.
எனக்கு முன்னதாக எனது தந்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மனுநீதி சோழன் சிலையை செய்து கொடுத்தார். அதே போல, எனது தந்தை ராதாகிருஷ்ணன் தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் செய்து அளித்திருக்கிறார்.
மேலும்,தவெக மாநாட்டில் விஜய்க்கு அளிக்கப்பட்ட வீரவாள் நானும் எனது தந்தையும் சேர்ந்து தான் சோழர் காலத்து முறையில் செய்தோம். தவெக மாநாட்டில், விஜய் அந்த வாளைத் தூக்கி காண்பித்த போது எழுந்த ஆரவாரம் மிகுந்த சந்தோஷம் அளித்தது. பழைய சோழர் காலத்தில் பயன்படுத்திய வடிவங்களின் படி 3 உலோகங்களை வைத்து இந்த வாளை செய்தோம்”, என அவர்கள் தெரிவித்துள்ளனர்.