அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா த.வெ.க முதல் மாநாடு.? பொதுமக்கள் கருத்து.!
தவெக மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், அதுபற்றிய செய்திகள் மக்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : இதுவரை திரை நட்சத்திரமாக உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியல் கட்சித் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விவி சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை தவெக தொண்டர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நாளை மாலை தொடங்கும் இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தனது கட்சி கொள்கை, கட்சிக்கான கோட்பாடுகளை அறிவிக்க உள்ளார். அதன் பிறகு தான் தவெக கட்சி எந்த மாதிரியான பாதையில் பயணிக்க உள்ளது என தெரியவரும். இதுவரையில், தவெக மாநாடு பொதுமக்கள் மத்தியில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை காணலாம்.
நமது தினச்சுவடு செய்தி நிறுவனத்திடம் பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை கிழே பார்க்கலாம்.
மதுரையில் இருந்து அன்பரசு கூறுகையில், “தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறுவது தெரியும். அதற்கான பணிகள் எங்கள் பகுதியில் களத்தில் மிக சிறப்பாக இருக்கிறது என்று கூறிக்கொள்ள முடியாது. ஆனால் சமூக வலைதள பக்கத்தில் தவெக மாநாடு பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றன. நிச்சயமாக தவெக அரசியல் கட்சி தமிழக அரசியலில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், நாளை விஜய், தனது கட்சி கொள்கை பற்றி கூறினால் மட்டுமே அக்கட்சியின் பாதை நமக்கு தெரியும். அதன் பிறகு தான் அந்த மாநாடு மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்க முடியும். 2026இல் தவெக ஆளும் கட்சியா எதிர்கட்சியா.? குறிப்பிட்ட வாக்கு சதவீதம் பெறுமா.? என்பதையெல்லாம் மாநாட்டுக்கு பிறகு மக்கள் மத்தியில் அக்கட்சி ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்தே கூற முடியும்” எனத் தெரிவித்தார்.
அடுத்ததாக தூத்துக்குடியில் இருந்து கோ.அண்ணாமலை கூறுகையில், “மாநாடு நாளை நடைபெறுகிறது என்பது எங்கள் பகுதியில் பெரும்பாலானோருக்கு தெரிகிறது. எங்கள் பகுதியில் அதற்கான பணியில் தவெக நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டுக்கு பிறகு அரசியல் களத்தில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறேன். மிக பெரிய தாக்கம் ஏற்படுத்துமா.? ஆளும் கட்சி – எதிர்க்கட்சி என்பதெல்லம் மாநாட்டின் தாக்கத்தை பொறுத்தே கூற முடியும். விஜய் அவரது மக்கள் இயக்கம் மூலம் நலத்திட்டங்கள் செய்துள்ளார் என்பது எனக்கு தெரியும். இனி அதனை அரசியல் களத்திலும் நேரடியாக செய்வார் என எதிர்பார்க்கலாம்.” என்று கூறினார்.
தூத்துக்குடியில் த.வெ.க பிரமுகர் முத்து கிருஷ்ணன் கூறுகையில், “எங்க பகுதியில் உள்ள அனைவருக்கும் நாளை தவெக மாநாடு நடைபெறுவது என்பது தெரியும். இந்த மாநாட்டிற்கு பிறகு நிச்சயம் மாற்றம் வரும். 2026 தேர்தலில் குறிப்பிட்டதக்க வாக்கு சதவீதத்தை நாங்கள் பெறுவோம். விஜய் ரசிகர்கள் சார்பிலேயே சுமார் 15 சதவீத வாக்குகள் தவெக-வுக்கு விழும், நாளை மாநாடு நிறைவு பெற்ற பிறகு, எங்கள் கட்சி கொள்கை அதன் செயல்பாடுகளை பொறுத்து நிச்சயம் இந்த வாக்கு சதவீதம் 30 சதவீதத்தை தாண்டும். 2026இல் நிச்சயம் மிக பெரிய மாற்றமாக தவெக உருவெடுக்கும். நிச்சயம் எங்கள் தளபதி முதலமைச்சராக வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். ” என்று தெரிவித்தார்.
இவ்வாறு, மக்கள் மத்தியில் பரவலான அரசியல் பெருபொருளாக தவெக மாநாடு உருவெடுத்துள்ளது. மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்று அக்கட்சி கொள்கைகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறினால் 2026இல் ஒரு அரசியல் தாக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தும் என நம்பலாம். அந்த தாக்கம் எப்படியான தாக்கம் என்பது மக்களின் விரல் மையிலே உள்ளது.