“உலக வரலாற்றில் அம்பேத்கர் போன்ற ஒரு தலைவர் இல்லை” தவெக தலைவர் விஜய்
நான் பார்த்த உலக தலைவர்களின் மிக சிறந்த தலைவர் அம்பேத்கர் தான் என புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் உரையாற்றியுள்ளார்.
சென்னை : இன்று விகடன் பதிப்பகம் சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய் அண்ணல் அம்பேத்கர் பற்றியும், அவரது பெருமைகளையும் எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், “அண்ணல் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது எனது வரம். நம்மில் பலரும் பிடித்த சிட்டி என்றால் அது நியூயார்க் என கூறுவோம். அப்படியான நியூயார்க்கில் 100 வருஷத்துக்கு முன்னரே சென்று அங்குள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று டாக்டர் பட்டம் வாங்கிய அசாத்திய மனிதர் அம்பேத்கர்.
அன்று அந்த மாணவரை படிக்க செல்லும் போது அவர் வாழும் சமூகமே அவரை இகழ்ந்து பேசியது. சக மாணவர்கள் இவருடைய தாகத்திற்கு கூட தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அத்தனையும் மீறி அவரை படிக்க செய்தது அவரின் வைராக்கியம். அந்த வைராக்கியம் தான் பின்னாளில் நமக்கு மிக சிறந்த தலைவரை கொடுத்துள்ளது.
எனக்கு தெரிந்த வரலாறில் உலகம் இப்படி ஒரு தலைவரை கண்டதில்லை. வன்மத்தை மட்டுமே காட்டிய சமூகத்திற்கு இவர் சிறந்த தலைவராக வாழ்ந்துள்ளார். இதுவரை தலித் மக்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்த தலைவர் அம்பேத்கர் அவர்கள். இன்று தலித் அல்லாத சகோதரர் விஜய் அவர்கள் அண்ணல் அம்பேத்கரின் நூலை வெளியிடுவது என்பது விகடனின் மூலம் நிறைவேறியிருக்கிறது.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஐ இந்திய ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். நமது நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு அரசியல் அமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டும்.” என்று அண்ணல் அம்பேத்கர் பற்றியும் அரசியல் சாசனம் பற்றியும் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.