“புயலுக்கு இதுதான் தீர்வா? சுயநல ஆட்சியாளர்கள்..” அறிக்கையில் சீறிய விஜய்!

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ஆளும் அரசு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

TVK Vijay

சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும் அரசு பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.  ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் ஆளும் அரசு மக்களை கைவிட்டு வருகிறது. முறையான திட்டங்களை தீட்டவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் செய்து இருந்தார்.

அவர் பதிவிடுகையில், ” புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமாகும். அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிட்டு வருகிறது.

நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களை அவர்கள் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் விட்டுவிட்டனர் இந்த சுயநல ஆட்சியாளர்கள். மக்கள் துன்புறும் வேளையில் ஆட்சியாளர்களைக் குறிவைத்துக் குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை இருந்தாலும், மக்கள் பக்கம் எப்போதும் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்து நிற்பதே நமது மக்களரசியல் நிலைப்பாடு என்பதால் இதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா?  மழை வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீகமான தலையாய கடமை, முதலில் ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் இதை முழுவதுமாகவே மறந்துவிடுகின்றனர். நிரந்தரத் தீர்வு குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு. எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த அடாத முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும் என்பதை இனிவரும் காலங்கள் கண்டிப்பாக உணர்த்தவே செய்யும்.”என்று பதிவிட்டு தனது கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்