ஆளுநரை சந்திக்கிறார் த.வெ.க தலைவர் விஜய்! காரணம் என்ன?
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று பிற்பகல் 1 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மதியம் 1 மணி அளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திடீரென விஜய் ஆளுநரை சந்திக்க முக்கியமான காரணம் பற்றிய தகவலும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. சந்திப்புகான முக்கிய காரணமே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பற்றி பேசுவதற்காக தான்.
இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில், ஆளுநரை இன்று சந்தித்து அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த இந்த சம்பவத்தை முழுமையான விசாரணை நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தி பேசுவதற்கும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை பிரச்சினைகளை தடுப்பது குறித்து நடவடிக்கையை தீவிரபடுத்துவதற்கு பேச தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசவிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, விஜய் இன்று காலை தன்னுடைய கைப்பட கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் ” கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம், எல்லா சூழ்நிலைகளிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும், எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை அமைத்தே தீர்வோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம். – உங்கள் அண்ணனாக பிரியமுடன் விஜய்.” என எழுதி இருந்தார். அதனை தொடர்ந்து அடுத்த கட்ட முடிவாக ஆளுநரை சந்தித்து விஜய் இந்த சம்பவம் குறித்து பேசவிருக்கிறார்.