பாஜக – அதிமுக கூட்டணி: ”விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி”- தவெக தலைவர் விஜய்.!
அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார்.
இதனை திமுக கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், இப்போது தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்திருக்கிறார். அதன்படி, 2026 தேர்தல் களம் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையே தான் என்று தவெக தலைவர் விஜய் அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுகவை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சரியமில்லை.
பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே 3 முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது.
2026 தேர்தல் களம் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையே தான். தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? தங்களுடன் உண்மையான உணர்வுடன் நிற்பவர்கள் யார்? தங்கள் வீட்டுப் பிள்ளைகள் யார்? தங்களுக்கான உண்மையான மக்களாட்சியைத் தர வல்லவர்கள் யார்? என்பதை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர்.
அதை நிரூபிக்கும் விதமாக, தங்கள் மனத்துக்குள் ஒரு தீர்க்கமான முடிவையும் ஏற்கெனவே எடுத்துவிட்டனர். மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 12, 2025