விநாயகர் சதுர்த்தியை தவிர்த்த விஜய்., ஆயுத பூஜையை ‘மிஸ்’ செய்யவில்லை.! காரணம் என்ன.?
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தவெக தலைவர் விஜய், இன்றைய ஆயுத பூஜை தினத்திற்கும், நாளைய விஜய தசமி தினத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு முன்னதாக இந்து பண்டிகையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் விஜயின் வாழ்த்து செய்தி அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி தினவிழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தவெக தலைவரான விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அப்போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் , அதனை தொடர்ந்து செப்டம்பர் 15ஆம் தேதி கேரளா பண்டிகையான ஓணம் பண்டிகையன்று தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். அதனை அடுத்து செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளுக்கு பெரியார் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார் விஜய்.
இங்கு தான் விஜயின் அரசியல், பேசுபொருளாக மாறியது. இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்ததை பாஜகவினர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலர் விமர்சனம் செய்தனர்.
மேலும் இச்சம்பவத்தை பேசுபொருளாக மாற்றும்வகையில், பெரியார் பிறந்த தினத்திற்கு பெரியார் திடல் சென்று அவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த நெற்றியில் திலகம் இட்டுள்ளது போன்ற புகைப்படத்தை நீக்கி திலகம் எதுவும் இன்றி வெறும் நெற்றியோடு இருக்கும் புகைப்படத்தை விஜய் பதிவேற்றினார். இதுவும் பேசுபொருளாக மாறியது.
இப்படியான சூழலில், இன்று தனது சமூக வலைதள பக்கத்தில், ” தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை. விஜயதசமி ஆகிய திருநாள்களில், நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.” என வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
— TVK Vijay (@tvkvijayhq) October 11, 2024
முன்னதாக பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்திய விஜய், திராவிட பாதையில் தான் தனது அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இன்று சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்து தனது அரசியல் பாதை பற்றிய பேசுபொருளை மீண்டும் கிளப்பியுள்ளார் தவெக தலைவர் விஜய். விஜயின் அரசியல் பாதை எப்படி இருக்கும்.? தவெக கொள்கை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அக்டோபர் 27அன்று முதல் மாநாட்டில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.