பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…
பரந்தூர் விமான நிலைய போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திக்க மேல்படவூர் திருமண மண்டபத்திற்கு வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 910 நாட்களாக அப்பகுதியில் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தவெக கட்சித் தலைவர் விஜய் தற்போது பரந்தூர் வந்துள்ளார். இதற்காக சுமார் 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேல்பொடவூர் கிராமத்தில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
இதற்காக இன்று காலை 7.40 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் தனது வாகனத்தில் புறப்பட்டார். அதன் பிறகு தவெக கட்சிக் கொடி பொருந்திய தேர்தல் பிரச்சார வாகனத்தில் விஜய் பரந்தூர் வந்தடைந்தார். வழிநெடுக அவரது கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வந்தனர். பிரச்சார வாகனத்தின் மேல் பகுதியை முகம் தெரியும்படி நின்று கொண்டு தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி வந்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கிராம மக்களை சந்திக்கும் மேல்பொடவூர் பகுதியில் 13 கிராம பகுதி மற்றும் தவெக சார்பில் முன் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களும் அடையாள அட்டை காண்பிக்கப்பட்ட பிறகு தான் அனுமதிக்கப்பட்டனர். தவெக தொண்டர்கள் கண்ணன்தாங்கல் சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு பொடவூர் அனுமதி மறுக்கப்பட்டது.