அரசியலுக்கு வந்தது ஏன்? பதில் சொல்லிய தவெக தலைவர் விஜய்!
தான் ஏன் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் விளக்கம் கொடுத்துள்ளார்.
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பாம்பு கதையடன் தனது உரையை தொடங்கியதோடு, கொக்கை விளக்கத்தையும் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தன் மீதான விமர்சனம், ட்ரோல், தமிழகத்தில் நடக்கின்ற அரசியல் பற்றியும், திராவிடத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்கிற விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.
அரசியலுக்கு வந்தது ஏன்?
“இந்த அரசியல் நமக்கு எதற்கு…? நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தால் சுயநலமில்லையா? வாழ வைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது நல்ல விசுவாசமாக இருக்குமா? அரசியல் சரிவருமா என யோசித்த போது பல கேள்விகள் பூதம் போல வந்தன.
எல்லாவற்றையும் பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டே இருந்தால் எதையும் உருப்படியாக செய்ய முடியாது. சில விஷயங்களில் பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் இறங்கி அடித்தால்தான் நம்புபவர்களுக்கு நல்லது செய்ய முடியும் என தோன்றியது. அதான் இறங்கிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
அரசியலில் நாம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். சரியான நிலைப்பாடு எடுத்துவிட்டால் நமது எதிரி யார் என சொல்லத் தேவையில்லை. அவர்களே நம் முன் வந்து நிற்பார்கள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என அறிவித்தபோதே நமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவித்துவிட்டோம்.
என்னோட Career-ன் உச்சத்தை உதறிவிட்டு, அந்த ஊதியத்தை உதறிவிட்டு, உங்கள் விஜயாக உங்களை மட்டுமே நம்பி அரிசியலுக்கு வந்திருக்கேன் என்றும், 2026 தேர்தலில் மக்கள் தவெக கட்சி சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அணுகுண்டாக மாறும் எனக் கூறியுள்ளார்.