பாஸ் இருந்த உள்ளே., இல்லைனா வெளியே! தவெக முதல் பொதுக்குழுவில் ‘கறார்’!
தவெக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அனுமதி பாஸ் உள்ளவர்க்ளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் இன்னும் சில மணிநேரத்தில் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கவிருக்கிறது என கூறப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.
கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ பொதுக்குழு கூட்டமாகும். இதில் கட்சி தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேற்கொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு இ-மெயில் , வாட்ஸாப் வழியாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டதிற்கு வர கட்சியினருக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாஸ் யார் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே பொதுக்குழு கூட்டத்தில் உள்ளே வர அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை. தூத்துக்குடி உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுக்கே பாஸ் வழங்ப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால திட்டங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.