தவெக மாநாடு : பணிகளை நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்திய விஜய்!
இன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள மாநாட்டிற்கு விஜய் நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
விழுப்புரம் : தமிழகமே எதிர்நோக்கி காத்திருக்கும் தவெக கட்சியின் முதல் மாநாடானது இன்று விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. மேலும், மாநாட்டிற்க்கான அனைத்துத் தேவைகளும் பக்காவாக தயாராகி இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவரான விஜய் நேற்று இரவு மாநாட்டு திடலில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், நேற்று மாலை பொழுதே மாநாடு திடலுக்கு சென்ற விஜய், சிறுது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டுப் பிறகு சுமார் 2 மணி நேரம் அங்கு ஆய்வு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மாநாட்டின் பணிகளை எதுவரை சென்றுள்ளது?, பாதுகாப்பு பணிகள் என்னென்ன?, மாநாட்டுக்கு வருபவர்கள் மற்றும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இன்று மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில், மாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். இதனால், விஜய் முன்னதாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விஜய் தங்குவதற்கு வசதியாக மாநாடு நடைபெறும் அப்பகுதியில் கேரவன் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகவும், அதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தவெக கட்சியின் இந்த முதல் மாநில மாநாட்டிற்கு சுமார் 6000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வெளிநாடுகளிலிருந்தும் பாதுகாப்பு பணிகளுக்காக பவுன்சர்கள் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.