தவெக மாநாடு : தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார் தலைவர் விஜய்!
தவெக கட்சியின் முதல் மாநில மாநாடானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் தொண்டர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த அக்-27ம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடானது பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சகணக்கான தொண்டர்கள் பங்கேற்று தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த மாநாட்டில் விஜய் பேசியது தான் அடுத்த 2 நாளாக தமிழகத்தில் தவெகவின் முதல் மாநாடு தான் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், மாநாடு முடிந்து 2 நாட்களுக்கு பிறகு விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில், தனது தவெக கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,”மாநாடு நடத்த பல்வேறு காரணங்களால் நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று, நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய நம் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
மாநாட்டில், நாம் அனைவரும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி.
எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. எனவே, அவர்கள் அனைவருக்கும் நன்றி.
மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டு கோள்களை ஏற்று. தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி”, என இப்படி பலருக்கும் நன்றியைத் தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) October 29, 2024