தவெக மாநாடு : விபத்தில் தொண்டர் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!
தவெகவின் முதல் மாநாடு இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சென்னை : இன்று மாலை விஜயின் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, நேற்று நள்ளிரவு முதலே விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மற்றும் குடும்பங்கள் எனக் கூட்டம் கூட்டமாக மாநாடு திடலில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், விழுப்புரத்தில் இன்று நடக்கும் தவெக மாநாட்டுக்குக் கொடியுடன் சென்று கொண்டிருந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தவெகவின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் இந்த நிலையில் இப்படி ஒரு துயரம் சம்பவம் நடந்துள்ளதால் கட்சித் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது போல ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று விடும் என்ற அக்கரையில் தான், முன்னதாக தவெக தலைவர் விஜய் இரு சக்கர வாகனங்களில் வர வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.
தவெகவின் அறிவுறுத்தல் :
அவர் முன்னதாக வெளியிட்ட அந்த செய்திக் குறிப்பில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாநாட்டிற்கு வர வேண்டாம் எனவும், மது அருந்தி விட்டு வரவேண்டாம் எனவும், குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு வரவேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது அறிவுறுத்தலைக் கேட்காத வண்ணம் பொதுமக்கள் இப்படி அலட்சியமாக இருப்பது நல்ல ஒரு நாளில் வேதனை அடையும் ஒன்றாகவே அமைந்துள்ளது.