தவெக மாநாடு : 4 பேர் உயிரிழப்பு.!
நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற தவெக மாநாடு தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
சென்னை : நேற்று விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 13 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என தகவல் வெளியானது. எதிர்பார்த்ததை விட அதிகளவு கூட்டம் கூடியதால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்கி நடத்தினர். இந்த மாநாட்டில் காலை முதலே தொண்டர்கள் காத்திருந்த்தால் கடும் வெயில் தாக்கம் காரணமாக சிலர் அங்கங்கே மயங்கி விழும் நிலையும் ஏற்பட்டது.
சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவர் மாநாட்டு திடலில் மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
திருச்சியில் இருந்து தவெக நிர்வாகி சீனிவாசன் தலைமையில் 6 பேர் காரில் விக்கிரவாண்டி நோக்கி வந்து கொண்டிருக்கையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து தடுப்பில் மோதி சாலை பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சீனிவாசன், தவெக நிர்வாகி கலைக்கோவன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தவெக மாநாட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் தவெக கட்சிக் கொடியுடன் புறப்பட்ட சென்னை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் புறப்பட்டனர். அவர்கள் மூர் மார்க்கெட் பகுதியில் தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மோதி விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்வாறு நேற்று தவெக மாநாட்டு புறப்பட்டவர்கள், கலந்து கொண்டவர்களில் 4 பேர் உயிரிழந்த சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய இளைஞர் நிதிஷ் குமார் என்பவர் விக்கிரவாண்டி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இவர் தவெக மாநாட்டிற்கு கலந்து கொள்ள வந்தார் என்றும் , கிழே விழுந்து உயிரிழந்தார் என்றும் தகவல் வெளியாகின. பின்னர் அந்த செய்தி மறுக்கப்பட்டு அவர் சொந்த ஊர் திரும்பினார் என்றும், உயிரிழக்கவில்லை என்ற செய்தி ரயில்வே ஊழியர் மூலம் தெரிவிக்கப்பட்டது.