ஜீரணிக்க முடியாது., இதுபோல இனி நடக்க கூடாது.! உயர்நீதிமன்றம் வேதனை.!
சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து முடித்து வைத்திருந்தது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னர் நடைபெற்ற விசாரணையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்றும், துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, இன்று இந்த வழக்கு விசாரணையின் போது, அதிகாரிகளின் சொத்துக்களை சேகரிக்க 3 மாத காலம் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் நீதிமன்ற அமர்வு கூறுகையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. அதுபோல அல்லாமல், லஞ்ச ஒழிப்பு துறை நியமாக விசாரணை நடத்த வேண்டும்.
உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாது. இதற்கு முன் இதுபோல ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இனி எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளோம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு விசாரணையில் குறிப்பிட்டனர்.