8 நாட்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலுக்குள் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்.!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், 8 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.
ஏப்ரல் மாத மீன்பிடி தடை காலம் நெருங்குவதால் இந்த காலகட்டத்தில் மீன்வரத்து என்பது குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த நேரத்திலும் துறைமுக சங்கத்தினர் வழக்கமான சந்தா தொகை கேட்பதாக குற்றம் சாட்டியும், வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியும் தூத்துக்குடி துறைமுக விசைப்படகு தொழிலாளர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
கோரிக்கைகள் : கடந்த 7 நாட்களாக இந்த போராட்டம் தொடர்ந்து வந்தது. 6 சதவீத சந்தா தொகை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் ( வாரத்தில் 4 நாட்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது ) எனவும் கோரிக்கைகள் வைத்து இருந்தனர்.
பேச்சுவார்த்தை : இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து அண்மையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர், மீன்பிடி சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
போராட்டம் வாபஸ் : அதில், உடன் பாடு ஏற்பட்டு 8 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது துறைமுகத்தில் காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர்.