டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து: நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டதற்காக அரிட்டாபட்டியில் நாளை(ஜன.26) பாராட்டு விழா நடைபெற உள்ளது
மதுரை : மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து போராடினார்கள். இதனையடுத்து இந்த திட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்.
குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தையும் நிறைவேற்றினார். பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.
இதனையடுத்து மு.க.ஸ்டாலின் ” நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது.
இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை அரிட்டாப்பட்டிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டதற்காக அரிட்டாபட்டியில் நாளை(ஜன.26) பாராட்டு விழா நடைபெற உள்ளது.
டங்ஸ்டன் திட்டதிற்கு எதிராக போராட்டம் நடத்திய போராட்ட குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நாளை நடைபெறும் விழாவிற்கு வருகை தர அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளனர். எனவே, அவர் நாளை அரிட்டாப்பட்டிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.