டங்ஸ்டன் விவகாரம்: “பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது” – ஈபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த முதலவர் ஸ்டாலின்!
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில், 'எடப்பாடி பழனிச்சாமி இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும்' என முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் காரசார விவாதங்கள் நடந்தன. மேலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததால், தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் நேற்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அதிமுக செய்த துரோகத்திற்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி என்றும், முழு பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க முடியாது எனவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சு.வெங்கடேசன் வெளியிட்டிருந்த வீடியோ பதிவை மேற்கோளிட்டு,
தனது பதிவில், ” மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. “பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது” மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் திரு. தம்பிதுரை அவர்கள் மழுப்பி இருக்கிறார்.
அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது.
அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் – புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி!
பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது!
மதுரை #Tungsten விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன்… https://t.co/muLgijIcie
— M.K.Stalin (@mkstalin) December 9, 2024