குக்கர் கிடைக்கவில்லை.. இடைத்தேர்தலில் இருந்து விலகுகிறோம்.! அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு.!
தேர்தல் ஆணையம் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்காத காரணத்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து தங்கள் கட்சி வேட்பாளர் விலகி கொள்வார் என அமமுக கட்சி தலைவர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அமமுக கட்சி சார்பில் சிவ பிரசாந்த் என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சி தலைவர் டிடிவி.தினகரன் அறிவித்தார். அதே போல சிவ பிரசாந்த் வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.
அடுத்ததாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகையில் அமமுக கட்சி சின்னமாக இருந்த குக்கர் சின்னத்தை டிடிவி.தினகரன் இந்த இடைத்தேர்தலுக்கும் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஒதுக்குமாறு கேட்டிருந்தனர். ஆனால், பொது தேர்தலில் சின்னம் ஒதுக்கியது போல இடைத்தேர்தலில் ஒதுக்க முடியாது என இன்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த காரணத்தாலும், இப்போது ஒரு சின்னத்தில் போட்டியிட்டு , வரும் நாடாளுமன்றத்தில் மீண்டும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டால் தேவையில்லாத குழப்பம் நிலவும் என்பதாலும், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து தங்கள் கட்சி வேட்பாளர் விலகி கொள்வார் என அமமுக கட்சி தலைவர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.