“திமுகவுக்கு கிடுக்குபிடி போட்ட திருமா., விசிக மாநாட்டிற்கு முழு ஆதரவு.!” டி.டி.வி.தினகரன் பேட்டி.!
மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவை அழைத்து கிடுக்குபிடி போட்டுள்ளது விசிக. அம்மாநாட்டிற்கு அமமுக முழு ஆதரவு அளிக்கிறது என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னையில் காந்தி சிலைக்கு அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக மது ஒழிப்பு மாநாடு, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தனது கருத்துக்களை கூறினார் .
அவர் பேசுகையில், ” மது ஒழிப்பு தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று. விசிகவின் மாநாடு தற்போது தேவையான ஒன்றுதான். அதுவும் காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடப்பது மிகச்சிறந்த ஒன்று. ஆட்சிக்கு வர வேண்டும் என்று எத்தனையோ பொய்களை சொல்லி திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. அதில் மது ஒழிப்பும் ஒன்று.
இன்று கூட்டணி கட்சியான விசிக தலைவர், நண்பர் திருமாவளவன் திமுகவிற்கு கிடுக்குபிடி போடுவது போல , ‘இன்னும் ஏன் மதுவிலக்கு கொண்டுவரவில்லை., இப்போது செய்யாமல் எப்போது செய்யப் போகிறீர்கள்.’ என்று மாநாடு நடத்தி, அதில் திமுகவினரையும் வரவழைத்துள்ளார் திருமாவளவன்.
என்னைப் பொறுத்தவரை திமுகவினர் சொன்னது எதையும் செய்ய மாட்டார்கள். மாநாட்டில் நான் கலந்து கொள்ளவில்லை. எங்களுக்கு அழைப்பு வந்து இருந்தால் எனது கட்சி சார்பாக வந்திருப்போம். நாங்கள் அதனால் தான் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துக் கொள்கிறோம். அதுவே போதுமானது. மது ஒழிப்புக்கு எங்கள் ஆதரவை நாங்கள் முதலிலிருந்து கூறி வருகிறோம். ” என்று மது ஒழிப்பு மாநாடு குறித்து டி.டி.வி.தினகரன் கூறினார்.
அடுத்து துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு டிடிவி.தினகரன், ” முதலமைச்சர் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பதவியை கொடுத்துள்ளார். ஆனால், இவ்வளவு அவசரமாக, விமர்சனங்கள் அதிகம் வரும் அளவுக்கு துணை முதலமைச்சர் பதவி எதற்கு கொடுக்கப்பட்டது என்ற கேள்வி எல்லோரும் மனதிலும் உள்ளது. உதயநிதி துணை முதல்வரானதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி போவதில்லை மதுவிலக்கு வரப்போவதில்லை. 2006இல் மைனாரட்டி திமுக கவர்மெண்ட்டில் ஸ்டாலின் முதல்வரானார். அதற்கடுத்து இப்போது உதயநிதி துணை முதல்வராகியுள்ளார். இதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அவர்கள் குடும்பத்திற்கு வேண்டுமானால் இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். ” என்று டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.