திமுகவும் அதிமுகவும் உபா சட்டத்திற்கு துணை நின்றது கண்டனத்திற்குரியது! டி.டி.வி.தினகரன் காட்டம்!
சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசானது, உபா சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டிற்கு எதிராக செயல்படும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க முடியும் விசாரணை நடைபெறும் போது குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை முடக்க முடியும் என சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் ஆளுங்கட்சி இச்சட்டத்தை நிறைவேற்றியது.
இது குறித்து, அமமுக தலைவர் டிடிவி.தினகரன் தனது இணையதள பக்கத்தில்,
‘சிறுபான்மையினரின் காவலர்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.கவும், அதிமுகவின் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகளும் இந்த சட்டத்திருத்தம் நிறைவேறுவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நின்றிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.,’ என்றும்,
இந்த சட்டத்தில் ஏற்கனவே தனி நபர்களை விசாரிக்கும் அதிகாரம் இருக்கும் சூழலில், தற்போது விசாரிக்கும் போதே சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்காக சட்டத் திருத்தம் செய்வது தேவையற்றது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது தனி நபர்கள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.’ என இச்சட்டத்தின் மீதான தனது காட்டமான கருத்தை முன்வைத்தார்.