டிடிவி தினகரன் திவாலானவர்! அமலாக்கத்துறையின் நோட்டீஸ் ரத்து – சென்னை ஐகோர்ட் உத்தரவு!

TTV Dhinakaran

அம்மா மக்கள்  முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

அமமுக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்பியுமான டிடிவி தினகரன், கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து ரூ.62.61 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலம் பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும் அமலாக்கத்துறையினர், ஃபெரா சட்டத்தின் (அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம்) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 1998-ம் ஆண்டு டிடிவி. தினகரனுக்கு ரூ. 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தினகரன் மேல் முறையீடு செய்ததை அடுத்து, விதிக்கப்பட்ட ரூ. 31 கோடி அபராதத்தை ரூ. 28 கோடியாக குறைக்கப்பட்டது.  கடந்த 2001ம் ஆண்டில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.28 கோடி  அபராதத்தை செலுத்தாததால் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத் துறை நோட்டீஸ் பிறப்பித்தது.

அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து தினகரன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.  விசாரணையில், தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி, அதனை ரத்து செய்து கடந்த 2003ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005ல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஐகோர்ட்டில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்றது.

அப்போது இரு தரப்பிலும் ஆஜராகி வாதங்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்