TTF Vasan Case : டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த காஞ்சிபுரம் நீதிமன்றம்!
யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது வீலிங் செய்ய முயற்சி செய்தார். அந்த சமயம் பைக் கட்டுப்பாட்டை இழந்து மிகவும் வேகமாக கீழே இருந்த பள்ளத்தில் விழுந்தது. அதில் இருந்த டிடிஎஃப் வாசனும் கீழே விழுந்து அவருக்கு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த டிடிஎஃப் வாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கை எலும்பு முறிந்து கால்கள் மற்றும் உடம்பில் காயங்கள் ஏற்பட்டது. இந்நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஒட்டிய காரணத்தால் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிணையில் வெளிவர முடியாதபடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் தரப்பில் ஜாமீன் மனு காஞ்சிபுர நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமீன் மனு கொடுக்கமுடியாது என கூறி இந்த வழக்கை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இன்று ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி செம்மல் அவரின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், ஏற்கனவே தமிழக காவல்துறை டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.