இந்தியைத் திணித்து, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா? – சீமான்

Default Image

‘இந்து’, ‘இந்தி’,’இந்தியா’ என ஒற்றையாட்சியை நிறுவி, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயலும் பாஜகவின் கொடுங்கோல் நடவடிக்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயல்களாகும் என சீமான் அறிக்கை. 

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில், அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக எனும் ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.

ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தது முதல், பல்வேறு வடிவங்களில் இந்தியை மெல்ல மெல்லத் திணித்திட முயல்வதும், இறந்த சம்ஸ்கிருத மொழிக்கு உயிரூட்ட வேலைசெய்வதுமான பாஜக அரசின் போக்குகள், மண்ணின் மக்களுக்கெதிரான ஆரிய முகத்தையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இந்தியாவிலுள்ள தேசிய இனங்களையும், அதன் தனித்துவ அடையாளங்களையும் முற்றாகச் சிதைத்தழித்து ‘இந்து’, ‘இந்தி’,’இந்தியா’ என ஒற்றையாட்சியை நிறுவி, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயலும் பாஜகவின் கொடுங்கோல் நடவடிக்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயல்களாகும்.

பாஜக அரசின் இந்தித்திணிப்பை இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழகமும், தமிழர்களும் எதிர்த்து நின்று சமரசமில்லாது சமர் புரிவோம் எனப் பேரறிவிப்பு செய்து, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச் செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்