கலைஞருக்கு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுஷ்மிதா தேவ் புகழாரம்!
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது, இந்த மாநாட்டில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி சுஷ்மிதா தேவ், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மிக நீண்டகாலம் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். சமூகநீதி, சமத்துவத்துக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கலைஞர். நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு முன்னிலையில் உள்ளது.
நான் கூகுளில் தேடி பார்க்கும்போது தமிழ்நாட்டில் எத்தனை நலத்திட்ட உதவிகள் மகளிருக்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்று என்னால் எண்ணி முடிக்க முடியவில்லை. கலைஞர் கருணாநிதி கொண்டுவந்த நலத்திட்ட உதவிகளை மேலும் வீரியத்துடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார். மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பெயரளவுக்கு மட்டுமே நிறைவேற்றுள்ளது மத்திய பாஜக அரசு. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.