நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்! திருச்சி எஸ்பி பரபரப்பு குற்றசாட்டு!
நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் அதனை கண்காணிக்க வேண்டும் என திருச்சி எஸ்.பி வருண்குமார் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்
சென்னை : சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்று, சைபர் கிரைம், இணையதள மிரட்டல் குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று சண்டிகரரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட எஸ்பி வருண்குமார், நாம் தமிழர் கட்சி பற்றி தனது குற்றசாட்டை முன்வைத்து பேசி உள்ளார்.
அவர் கூறுகையில்,” நாம் தமிழர் கட்சி, கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். அக்கட்சியினால் தானும் தன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இணையதளம் மூலம் குற்றம் செய்யும் கைக்கூலிகளை கண்காணிக்க 14சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.” என்று கூறினார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையேயான உரசல்கள் ஊர் அறிந்தது. எஸ்.பி வருண்குமாரின் குடும்பத்தை சிலர் அவதூறாக பேசியதும், அவருடைய மனைவி புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டேவையும் அவதூறாக பேசியதையும் தொடர்ந்து, அந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சியினர் உடனான இந்து தொடர் உரசல்கள், இணையதள கருத்து மோதல்கள் என தொடர்ந்ததை அடுத்து, அண்மையில் திருச்சி எஸ்.பி வருண்குமார் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடங்கி வைத்த இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், திருச்சி எஸ்பி வருண்குமார், நாம் தமிழர் கட்சி குறித்து இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தேசிய அளவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனம் பெற்று ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் அதனை கண்காணிக்க வேண்டும் என திருச்சி எஸ்.பி வருண்குமார் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.