செத்தாலும் எங்கள் சின்னம் தான்! உணர்ச்சிவசப்பட்ட துரை வைகோ
Durai Vaiko: செத்தாலும் எனக்கு எங்கள் சின்னம் தான் என மதிமுக திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் துரை வைகோ பேச்சு.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக, மதிமுக சார்பில் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய துரைவைகோ, “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாத போது தான், நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன், என் தந்தைக்கு தலைகுனிவு ஏற்பட்டு விடக்கூடாது என்றே அரசியலில் நுழைந்தேன்
சென்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், நான் கேட்டதற்காக சாத்தூர் தொகுதியை நமக்கு ஒதுக்கினார், அப்போது கூட நான் போட்டியிடவில்லை, சகோதரர் ரகுராமனை தேர்தலில் போட்டியிட கூறினேன்
இப்பொழுதும் தேர்தலில் நிற்கிறேன் என்று நான் சொல்லவில்லை. வேறு யாரேனும் நிறுத்துங்கள், நான் பணியாற்றுகிறேன் என கூறினேன், ஆனால் கட்சி நிர்வாகிகள் தான் என்னை நிற்குமாறு கூறினர். கட்சிக்காகவே தேர்தலில் நிற்கிறேன். ஏனென்றால் என் கட்சிக்காகவும், என் தந்தைக்காகவும் 30 வருடங்கள் உழைத்து உழைத்து தேய்ந்துவிட்டார்கள் எங்கள் ஆட்கள் (உணர்ச்சிவசப்படுகிறார்)
சின்னமா..! செத்தாலும் எங்கள் சின்னம் தான், நான் சுயமரியாதைக்காரன்! அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி கட்சி திமுக. திமுகவையும், உதயசூரியன் சின்னத்தையும் நாங்கள் உயிராக நேசிக்கிறோம், அந்த சின்னத்தை மதிக்கிறோம். ஆனால், மதிமுக கட்சியில் இருந்து நான் ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு கட்சியில் நிற்க முடியாது. இப்போதும் சொல்கிறேன்..! உங்களுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.. திராவிடர் கழகம் போல அரசியல் செய்துவிட்டு போகவும் தயார்” என பேசினார்.