பாலியல் அத்துமீறல் விவகாரம் : வருத்தம் தெரிவித்த திருச்சி என்.ஐ.டி !
திருச்சி : விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து உள்ளது என்.ஐ.டி நிறுவனம்.
திருச்சியில் உள்ள என்ஐடி விடுதியில் நேற்று (வியாழக்கிழமை) காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் இணையதள சேவை அளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது அங்கு வந்த ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த சமயத்தில் சாதுரியமாகச் சுதாரித்துக் கொண்ட அந்த மாணவி வெளியே ஓடிவந்து சப்தம் போட்டிருக்கிறார். உடனே அருகிலிருந்த சக மாணவிகள் கதிரேசனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர் கதிரேசனைத் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட நிர்வாகத்தைக் கண்டித்து இரவு முழுவதும் விடிய விடிய என்.ஐ.டி. வளாகத்தில் மாணவிகளுடன் இணைந்து மாணவர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.பி வருண் குமார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரிடம் மாணவர்கள் விடுதி காப்பாளரை மாற்ற வேண்டும் எனவும், அவதூறாகப் பேசிய காப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பல கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனால், தலைமை விடுதி காப்பாளரான பேபி என்பவர் மாணவர்கள் மத்தியில் நடந்த இந்த லட்சியத்திற்கு மன்னிப்பு கோரினார். அதன் பின்னர் மாணவர்கள் அந்த போராட்டத்தை வாபஸ் வாங்கினார்கள். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.டி நிறுவனம் விளக்கமளித்து செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
அந்த குறிப்பில், “ஓபல் மகளிர் விடுதியில் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட ஒரு தொழிலாளியின் மோசமான பாலியல் முறைகேடால் என்.ஐ.டி. நிர்வாகம் வருத்தமடைந்துள்ளது. மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய விவகாரம் மிகுந்த உணர்திறனுடனும் அக்கறையுடனும் பார்க்கப்படுகிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும், குறிப்பாகப் பெண் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கப் பாதுகாப்பு அதிகாரி இன்னும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது”, எனத் தெரிவித்திருந்தனர்.