பழங்குடியின பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை.. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பழங்குடியின பெண்களுக்கும் சொத்துரிமை கிடைக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு.
பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. ராமசாமி என்பரின் குடும்ப சொத்தில் மனைவி, மகளுக்கு சமபங்கு தர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராமசாமியின் மகன்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்து வாரிசுரிமை சட்டத்தில் பழங்குடியின பெண்கள் சேர்க்கப்படவில்லை என மனுத்தாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. சொத்தில் பங்கு தர வேண்டும் என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறு எனவும் மனுத்தாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையின்போது, நாட்டில் அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டு கடந்தும் பழங்குடியின பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பது வருத்தமளிக்கிறது, எனவே பழங்குடியின பெண்களுக்கும் சொத்துரிமை கிடைக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.