கொரோனாவிற்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
தமிழகத்தில் கொரோனா வைரஸூக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் உள்ள பிளாஸ்மா தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அதனை கொண்டு மற்ற கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சையாகும்.பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்ட பின்பு, மீண்டும் ரத்தமானது, குணமடைந்து பிளாஸ்மா தானம் செய்தவர்களின் உடம்பில் செலுத்தப்பட்டுவிடும்.இந்த சிகிச்சை முறைக்காக நாட்டிலேயே முதன் முறையாக பிளாஸ்மா வங்கி தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸூக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கியை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் 18 முதல் 65 வயதுடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.