போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தையை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று (9-ம் தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Bus Strike : பண்டிகைக்கால ஸ்ட்ரைக் முறையற்றது.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பொங்கல் நெருங்கி வரும் நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது, போராட்டம் நடத்த உரிமை உள்ளது, ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்?, அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவதாகமாக இருக்கிறீர்கள்,
இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன சிக்கல்? எனவும் இருதரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் சற்று நேரத்திற்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனவரி 19 வரை வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சி.ஐ.டி.யு. மற்றும் அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் போக்குவரத்துக் கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.